வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.