சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
”நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தோம், ஆனால் இன்று ஜனாதிபதி அலுவலகம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனாலேயே போராட்டத்தை 5 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம். அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், இன்று தீர்வு கிடைக்காவிட்டால் நாளை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும்” எனவும் சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்தார்.