இந்தச் சம்பவம் அராலி கிழக்குப் பகுதியில் உள்ள ஏரம்பு ராகவன் என்பவரது வீட்டில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
வீட்டில் உள்ளவர்கள் அயலில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் திடீரென குறித்த வீட்டில் தீப்பிடித்துள்ளது.
வீடொன்று தீப்பிடித்து எரிவதை அவதானித்த அயல்வீட்டுக்காரர் ஒருவரே வீடு எரிகின்றது என சத்தமாகக் கூச்சலிட்டு தகவலைத் தெரியப்படுத்தினார்.
சம்பவம் அறிந்து வீட்டார் செல்ல முன்னர் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார், மின்சார சபையினர், தீயணைப்புப் பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதற்கிடையில் கிராம இளைஞர்கள் ஒன்றுகூடி தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர்.
தீப்பிடித்ததற்கான காரணம் மின்னிணைப்பில் ஏற்பட்ட சேதமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சில நேரத்திற்குள் அங்கு விரைந்த மின்சாரசபையினர் கிராமம் முழுவதுமான மின்னிணைப்பை ஒரு சில மணிநேரம் துண்டித்தனர். இதனால் கிராமம் முழுவதும் பதற்றநிலை உருவாகியது. அதன்பின்னர் குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பிரிவினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டார் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. காணிப்பத்திரங்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள், வீட்டுத் தளபாடங்கள், ஆடைகள், தொலைக்காட்சிப் பெட்டி, பாடசாலைப் புத்தகங்கள் என வீட்டிலிருந்த அனைத்துமே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இறுதியாக சம்பவம் நடந்த பகுதிக்கு வட்டுக்கோட்டைப் பொலிஸார் வருகைதந்து பார்வையிட்டதோடு தீ எவ்வாறு பற்றியது, என்ன நடந்தது என்றவாறான விசாரணைகளை முன்னெடுத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.