தொடரும் ஆக்கிரமிப்பு: நாக விகாரையாக மாற்றப்பட்ட நாகதம்பிரான் ஆலயம்!
பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்
குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகதம்பிரான் ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று, மீண்டும் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் மீளக் குடியேறி, ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில், 2021ஆம் ஆண்டளவில் பௌத்த பிக்கு ஒருவரினால் தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் புதையல் தோண்டியுள்ளதாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள திரியாய் மக்கள் நெல் விதைப்பின்போதும், அறுவடையின்போதும் வளத்தாமலையடி நாகதம்பிரானுக்கு நேர்த்தி வைத்து பொங்கிப் படைத்த பின்னரே தமது தொழிலைத் தொடங்குவதாகவும், புல்மோட்டையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் கூட நம்பிக்கை வைத்து நேர்த்தியை நிறைவேற்றி வந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த ஆலயத்துக்கு சென்று வழிபட முடியாத காரணத்தாலும், நேர்த்திக்கடன்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமையினாலும் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புல்மோட்டை பிரதான வீதியில் நின்று, ஆலயத்தை பார்த்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
எனவே, தங்களுக்கு துன்பங்கள் வரும்போதெல்லாம் உச்சரிக்கப்படுகின்ற வளத்தாமலையானை வழிபடுவதற்கு அனுமதி வழங்குமாறு திரியாய் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.