மருத்துவத்துறைக்குத் தெரிவாகிய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை லாகுகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. காரைதீவைச் சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த மாணவன் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் ஒருவராவார். இவர் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத் துறைக்கு தெரிவாகியிருந்தார்.
அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு நேற்றுக் (14) காலை திரும்பி வரும்பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அவரது பூதவுடல் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவதுறைக்கு தெரிவான குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் முழுக் காரைதீவு பிரதேசம் மட்டுமன்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.