இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்துடன் லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை இரட்டைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியும் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் லொறி சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த 25 பேர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.