சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்தார்
அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர். இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் தற்போது ஏ9 வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கில் கூடியுள்ள மக்கள் ”வேண்டும் வேண்டும் வைத்தியர் அர்ச்சுனா வேண்டும்” என கோசமெழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டக்களத்தில் பெருமளவான காவல்துறையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த பொலிஸார் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்ய முடியால் போனது குறிப்பிடத்தக்கது.