உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு வருந்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு மணித்தியாலமும் பெறுமதி வாய்ந்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அந்த நேரத்தை செலவிட்டிருந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிருக்க முடியாது போயிருக்கும் எனவும் தெரிவித்தார்.
மஹரகம இளைஞர் சேவை மன்றக் கேட்போர் கூடத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உணவு, மருந்து, எரிவாயு, எரிபொருள் இன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், அதற்குத் தேவையான பணம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலையும், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.