எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கை இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வொன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு – கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை ஏற்க முடியாது என அம்பாறை – திருக்கோவில் பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பினருக்கு எதிராக பொலிஸ் இடையூறு விளைவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவில் பொறுப்பதிகாரி தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டவிரோதம் எனவும் நல்லிணக்கத்தோடு உள்ள திருக்கோவில் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.