நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை மீட்பதற்காக மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது அரச வருவாயை உயர்த்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது, என்றார்.
அரச வருவாயை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) நாட்டிற்கு பிரச்சினைகளை உருவாக்க விரும்பவில்லை என்றும் அதன் நிதி நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்ல யாரேனும் முனைந்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் IMF உடன்படிக்கையைத் திருத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், கடந்த கால நிதி சிக்கல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக விரிவான கலந்துரையாடலின் பின்னரே தற்போதைய உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும், எனவே மாற்றங்கள் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.