2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலிசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாம் நீண்டகாலமாகச் சந்தித்து வருகின்ற சம்பளப் பிரச்சனையை தீர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தாலும், அதற்கான வர்தமானியை இன்னும் வெளியிடவில்லை.
கடந்த 24 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். இம்முறை அரசு தாம் வழங்கிய வாக்குறுதியைச் சம்பள அதிகரிப்பில் காட்டவில்லை என்றால் நாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
அரசு கூறியது போன்று ஜனவரி மாதம் 20ஆம் திகதி மூன்றில் ஒரு பங்கு சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால், ஜனவரி 5ஆம் திகதி அதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட வேண்டும். இன்று வரை குறித்த செயற்பாடு நடைபெறவில்லை.
எனவே, எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் சம்பளப் பிரச்சனைக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்தார்.