இந்தியாவில் நடைபெறவுள்ள ஓய்வுபெற்ற வீரர்களுக்கான 3வது லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை அணியின் 9 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
6 அணிகள் பங்குபற்றவுள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த வியாழக்கிழமை டில்லியில் நடைபெற்றது. இதில் 97 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதன்படி, இம்முறை ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் இசுரு உதான மாறினார். அவரை 62 இலட்சத்திற்கு (இந்திய பணப்பெறுமதி) அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. அதேபோல, அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரராக தவால் குல்கர்னி இடம்பிடித்தார். அவரை 50 இலட்சத்திற்கு இந்தியா கெபிடல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
மேலும் 8 இலங்கை வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர். அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப்பை 49 இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.
சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரரான சீக்குகே பிரசன்னவை குஜராத் ஜயண்ட்ஸ் அணி 22.78 இலட்சம் ரூபாய்க்கும், டில்ஷான் முனவீரவை ஒடிசா கொனார்க் சூர்யாஸ் அணி 15.5 இலட்சம் ரூபாய்க்கும், மனிபால் டைகர்ஸ் அணி அஞ்சலோ பெரேராவையும் (41 இலட்சம் ரூபா), அசேல குணரட்னவையும் (36 இலட்சம் ரூபா) ஒப்பந்தம் செய்தது.
இதேவேளை, சதர்ன் சுப்பர்ஸ்டார்ஸ் அணி, ஜீவன் மெண்டிஸ் (15.60 இலட்சம் ரூபா), சுரங்க லக்மால் (34 இலட்சம் ரூபா) மற்றும் சதுரங்க டி சில்வா (29 இலட்சம் ரூபா) ஆகிய மூவரை ஏலத்தில் வாங்கியது. சகலதுறை வீரரான திசர பெரேராவை மனிபால் டைகர்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.