அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஏனைய தலைவர்கள் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் செல்லும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே மேடைக்கு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாக மேடையில் அறிவிக்க முடியும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் இன்று (03) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவினால் வெற்றிபெற முடியாது எனவும் அவருக்கு வழங்கும் வாக்கு அநுரகுமாரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமனாகும் என்பதால் இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.