ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.