தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் காணப்படுவதனால் சங்கு சின்னத்திற்கும் பொதுவேட்பாளருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று (17) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவிகளினால் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, திருகோணமாலை மாவட்ட தலைவி திருமதி செபஸ்டியான் தேவி, அம்பாறை மாவட்ட தலைவி திருமதி த.தேவராணி ஆகியோர் கலந்துகொண்டு தமது பொதுவேட்பாளருக்கான ஆதரவு கருத்துகளை முன்வைத்தனர்.