எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் பணியை சரியாகச் செய்யத் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் எதிர்க்கட்சியின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்திறனற்ற நிலையினால் 3 வீத வாக்குகளை கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் வெற்றியீட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
சவால்களை வெற்றிகொண்டு எதிர்க்கட்சியின் பணிகளை ரணில் விக்ரமசிங்க செய்வதாகவும் பொதுத் தேர்தலில் விரிவான கூட்டணி அமைத்து போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை.