தற்போதைய மழையுடனான சீரற்ற காலநிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மழைக்காலத்தில் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.
12 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 134,484 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. 1753 குடும்பங்களைச் சேர்ந்த 9663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சீரற்ற வானிலையில் கம்பஹா மாவட்டத்திற்கு அதிக பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தில் 20553 குடும்பங்களைச் சேர்ந்த 82839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 10914 குடும்பங்களைச் சேர்ந்த 40231 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் களு, களனி, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா என்பன பெருக்கெடுத்துள்ளன. 6 மாவட்டங்களுக்கு பூரண மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.