சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு BMW காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பல குழுக்கள் மூன்று நாட்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் வசிக்கும் அனைத்து வீடுகள் மற்றும் இடங்களை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
குறித்த கார் பதிவு செய்யப்படாதது மற்றும் போலியான இலக்கத் தகடு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காரை, இரகசிய காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்ததில், ‘டாக்சி அபே’ என்ற பெயரில் கார் அங்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சில ஆவணங்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில், பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெற வருமாறு ஜோன்ஸ்டனுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் சுகவீனமாக இருப்பதாகக் கூறி அவர் முன்னிலையாக தவறியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.