முன்னாள் போராளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடித் தீர்வு- பொன் சுதன்!
முன்னாள் போராளிகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 100 நாள் வேலைத்திட்டத்தினுள் உள்வாங்கி தீர்வினை வழங்குவேன் என தெரிவித்துள்ளார் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டும் சமூக செயற்பாட்டாளர் பொன் சுதன்.
கிளிநொச்சி பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நான் எதுவுமே செய்யாமல் அரசியலுக்கு வரவில்லை. முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று எங்களிடம் வாக்குகளை பெற்று எதுவுமே செய்யாமல் திரும்பவும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வந்திருக்கிறார்கள்.
இந்த அரசியல்வாதிகள் தமது சொந்த பணத்தில் ஒரு சதமேனும் மக்களுக்காக செலவுசெய்திருக்க மாட்டார்கள். நான் அவ்வாறு அல்ல. அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல்வேறு உதவித் திட்டங்களை எமது மக்களுக்காக செய்திருக்கிறேன்.
அரசியலுக்கு வருவதற்காக உதவி செய்யவில்லை. தனி ஒருவனாக எவ்வளவு செய்ய முடியுமோ அதை விட அதிகமாகவே செய்திருக்கிறேன். அதிகாரம் இருந்தால் இந்த மக்களின் குறையை தீர்க்கலாம் என்பதை உணர்ந்தே அரசியலுக்கு வந்துள்ளேன்.
என்னைத் தெரிவுசெய்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தி முன்னாள் போராளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
பொன் சுதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் (யாழ் தேர்தல் தொகுதி) தண்ணீர் பைப் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.