கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (26) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 8 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.
ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பறிகொடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்திருக்கும் என்பது நிச்சயம்.
இப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்த இலங்கை 2 – 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது.
இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை தம்புள்ளையில் ரி20 வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 2 ரி20 போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவி இப்போது கடைசிப் போட்டியில் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது.
ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் உபாதைக்கு மத்தியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி ஓட்டங்களுடன் சதத்தைப் பூர்த்தி செய்த எவின் லூயிஸும் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற ஷேர்ஃபேன் ரூதஃபர்டும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர்.
மழை காரணமாக நாணய சுழற்சி தாமதிக்கப்பட்ட போதிலும் போட்டி சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது.
உபாதையிலிருந்து முழுமையாக குணமடைந்த பெத்தும் நிஸ்ஸன்க மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் நிஷான் மதுஷ்கவுக்கு விடுகை வழங்க்பபட்டது.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே நீக்கப்பட்டு நிஷான் மதுஷன்க இணைத்துக்கொள்ளப்பட்டார்.
மழையினால் ஆட்டம் 5 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றபோது 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.
ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 23 ஓவர்களில் 193 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு அமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
எவின் லூயிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மூன்று இணைப்பாட்டங்களில் பங்கேற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது 5.4 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் எவின் லூயிஸ், அணித் தலைவர் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷாய் ஹோப் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 – 2 விக்.)
எனினும் எவின் லூயிஸ், ஷேர்ஃபேன் ரதஃபர்ட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர்.
எவின் லூயிஸ் 61 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடனும் ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 26 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
எவின் லூயிஸ் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் அவற்றில் 3 சதங்கள் இலங்கைக்கு எதிராக குவிக்கப்பட்டவையாகும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் 81 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓடட்ங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் மழை பெய்ததால் பிற்பகல் 3.42 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.
மழை ஒய்ந்த பின்னர் ஆட்டம் இரவு 8.50 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 23 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அதிரடியில் இறங்கிய குசல் மெண்டிஸ் தொடர்சியாக 4 பவுண்டறிகளை விளாச இலங்கையின் ஓட்ட வேகம் அதிகரித்தது.
அணியில் மீண்டும் இணைந்த பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவரும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 26 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் சரித் அசலங்க ஓட்ட வேகத்தை அதிரிக்க விளைந்து சிக்ஸ் ஒன்றை மட்டும் விளாசி ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 22 பந்துகளில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஆட்டநாயகன்: எவின் லூயிஸ், தொடர்நாயகன்: சரித் அசலன்க.