ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்க பரிந்துரை!
ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்க பரிந்துரை
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, பல்வேறு முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
குறித்த குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
குழுவின் பிரதான பரிந்துரைகளில், ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான நடைமுறையை உருவாக்குதல், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுதல் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் ஆகியவை அடங்குகின்றன.
மேலும், சில கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பிலும் குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளுக்கு தெளிவான மற்றும் முறையான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துறையராஜா தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, சுமார் 10 மாத காலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor: கதிர்