வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
விடுவிக்கப்படும் காணிகளை உரிய தரப்பினரிடம் மீண்டும் கையளிக்குமாறும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த அரச காணிகளை மீண்டும் உரிய தரப்பினரிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காக இராணுவ முகாம்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நிலைகள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான காணிகளின் அளவை தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் கோணத்தில் சிந்தித்து, விடுவிக்கக்கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
காணிகளுடன் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்த வேண்டும்
மக்களுக்கு காணிகள் மீண்டும் வழங்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்காக அதிக உற்பத்தித் திறனை பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
காணி விடுவிப்பு நடவடிக்கையுடன் இணைந்து, மீள வழங்கப்படும் காணிகளில் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
பல தரப்பினர் பங்கேற்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக மக்களின் பயன்பாட்டிற்கு வெளியில் காணப்படும் காணிகளை, தேசிய பாதுகாப்புத் தேவைகளை கருத்திற்கொண்டு மீளாய்வு செய்து, விடுவிக்கக்கூடிய காணிகளை உரிய தரப்பினரிடம் விரைவாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இதன்மூலம் மேலும் துரிதப்படுத்தப்படவுள்ளன.
Editor: கதிர்