Breaking News / 11 June 2026

பல மாவட்டங்களுக்கு கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

Puthujugam Admin | 1 min read
பல மாவட்டங்களுக்கு கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்று ஆரம்பம்: பல மாவட்டங்களுக்கு கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை


11 ஜூன் 2026 | இலங்கை


இலங்கையில் தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்று ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தளை, குருநாகல், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பதிவாகும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. இதன் விளைவாக சில நீர்த்தேக்கங்களில் வான் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் களனி கங்கை, களுகங்கை மற்றும் ஜின் கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகள் முழுக் கொள்ளளவை அண்மித்த நிலையில் பாய்ந்து வருகின்றன.


இதனால் அடுத்த சில நாட்களில் பெய்யவுள்ள கனமழை காரணமாக ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகளிலும் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை தொடர்ச்சியான மழை காரணமாக கேகாலை, நுவரெலியா, குருநாகல், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பாங்கான மற்றும் மண் தளர்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பதிவாகி வருகிறது. மவுசாகலை, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, புதிய லக்சபான, கலுகல, விமலசுரேந்திரா, மேல் கொத்மலை மற்றும் காசல்றீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், இன்று முதல் ஜூன் 16ஆம் தேதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையாக மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக ஜூன் 12ஆம் தேதி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கனமழையும், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பரவலான மிதமான மழையும் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.


இதனிடையே தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக இலங்கையைச் சூழ்ந்த கடற்பகுதிகள் அடுத்த சில நாட்களுக்கு கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Editor: கதிர்

#கனமழை #வெள்ளம் #மண்சரிவு