யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
யாழ்ப்பாணம், இலங்கை –
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் கடந்த காலத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில், தற்போது அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது, நீதிமன்ற உத்தரவு மற்றும் பொலிஸ் முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் முக்கியமான சட்டபூர்வ நடவடிக்கையாகும்.
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில், செம்மணியில் அமைந்துள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது, வெட்டப்பட்ட குழிகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
பெப்ரவரி 20ஆம் திகதி, சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை விரிவாக ஆய்வு செய்யவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது செம்மணி பகுதியில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் துறைசார் வல்லுநர்கள் மற்றும் அரச அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பேராசிரியர் சோமதேவ, கடந்த மே 3ஆம் திகதி, மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் தனிப்பட்ட கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், செய்தி சேகரிக்க செம்மணி பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் விசாரணைத் தேவைகளைக் காரணமாகக் காட்டி ஊடகச் சமூகத்துக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.