புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசிசுனாக் அரசாங்கத்தின் திட்டத்தினை தனது அரசாங்கம் தொடராது என பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா திட்டம் அது ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது அது ஒருபோதும் ஒரு தடுப்பு நடவடிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையை உண்மையில் கட்டுப்படுத்தா எந்த போலியான நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு நான் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா திட்டத்தினை நாங்கள் உள்வாங்கும் பிரச்சினை என அவர் விபரித்துள்ளார்.ருவாண்டா திட்டம் தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பே பரவலாக காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா திட்டம் மனித உரிமை அடிப்படையில் சட்டவிரோதமானது என பிரிட்டனின் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த போதிலும் ரிசிசுனாக் அரசாங்கத்தின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அகதிகள் குடியேற்றவாசிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமொன்றை நிறைவேற்றியிருந்தது.
இதனை தொடர்ந்து மே மாதத்தில்ரூ ருவாண்டாவிற்கு அனுப்புவதற்காக பலரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறிய படகுகளில் குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்கு வருவதை தடுத்து நிறுத்தப்போவதாக தெரிவித்திருந்த ரிசிசுனாக் ருவாண்டா கொள்கையை வெளிப்படையாக முன்வைத்திருந்தார்.
புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கையை பிரிட்டனிலேயே ஆராய்வதற்கு பதில் அவர்களை மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற திட்டம் என தெரிவித்திருந்த மனித உரிமை அமைப்புகள் ரிசி சுனாக் அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.