க.பொ.த. உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வௌியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் 5 அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்தார்.
வினாத்தாள் வௌியானமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தற்போது அம்பாறையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றிய அலுவலக உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த உயர் தர விவசாய விஞ்ஞான பாடத்தின் இரு பகுதி வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வௌியாகின.
பரீட்சைக்கு முன்னதாக இரு வினாத்தாள்களும் சமூக ஊடகங்களில் வௌியானமையும் தெரியவந்தது. இந்த நிலையில், குறித்த பரீட்சையை அடுத்த மாதம் முதலாம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.