மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று (18) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
கடந்த 9 ஆம் திகதி முதல் 5 நாட்களாக பல்வேறு கட்டங்களின் கீழ் சுகாதார தொழிற்சங்கத்தினரால் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுகளுடன் கலந்துரையாடிய போதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
எனவே, தமது பிரச்சினைக்கான தீர்வுக்காக அரசாங்கத்திற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தீர்வு வழங்கப்படாவிடின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.