தனது தலை முடியை அழகுபடுத்துவதற்காக மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு சென்ற பெண் ஒருவரின் தலை முடிகள் உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசியதாகக் கூறப்படும் அந்நிலையத்தின் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட பெண் திருமண நிகழ்வொன்றிற்குச் செல்வதற்காகத் தனது தலை முடியை அழகுபடுத்துவதற்குக் கடந்த 30 ஆம் திகதி மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த அழகு கலை நிலையத்தின் பணியாளர்கள் இந்த பெண்ணின் தலைமுடியில் கிரீம் வகைகளை பூசியுள்ளனர். இதன்போது, இந்த பெண்ணின் தலைமுடிகள் திடீரென உதிர்ந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பின்னர், குறித்த அழகு கலை நிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணியாளரும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.