76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் 754 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண் கைதிகள் 729 பேருக்கும் 25 பெண் கைதிகளுக்கும் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், யாழ்.சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகளும் மட்டக்களப்பு சிறையிலிருந்து 27 கைதிகளும் நேற்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கைதியொருவரை பார்ப்பதற்கு குடும்பத்தில் மூவருக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.