யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபர், வலான இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை – யஷோகபுர பகுதியிலுள்ள 2 மாடிக் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டிற்கு தப்பிச்செல்லும் நோக்கில் அவர் இவ்வாறு கல்கிசை பகுதியில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் என்பதுடன், கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 01 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழில் கொலை செய்தமை, சட்டவிரோத குழுக்களின் உறுப்பினராக இருந்தமை, வாகனங்களைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியமை, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிரபா என அழைக்கப்படும் பிரபாகரன் கௌசிகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.