யாழ். அரியாலை மாம்பழம் சந்தியில் ரயிலுடன் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் சாரதி சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்துள்ளார்.
அதேபகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்தவராவார்.
திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது.
அரியாலை ஏ.பி வீதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ.பி. வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மினிவான் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அந்தப் பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.