பிரபல கண்மருத்துவர் குகதாசன் அவர்களின் மறைவு தமிழ் இனத்தின் பேரிழப்பாகும். அன்னாரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் முன்னாள் போராளியும் படைப்பாளியுமான வெற்றிச்செல்வி.
1993 டிசம்பரில் காயம் அடைந்தேன்.
ஜனவரி 1994. உடல்முழுவதிலும் பட்டிருந்த சிறுகாயங்கள் ஆறத்தொடங்கி இருந்தன. கை மற்றும் முழங்காலில் பெரிய காயங்களில் மருந்துக் கட்டுகள்.
காதுக்குள் ஒரே இரைச்சல்…..
கண்களில் பார்வை இல்லை….
மருந்தோடும் உணவோடும் மனதோடும் போராடிக்கொண்டு கட்டிலில் கிடக்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிந்த நாட்கள்.
ஒருநாள் தலைவர் சொன்னதாக மகளிர் படைத்தளபதி விதுசா அவர்கள் என்னைத்தேடி வந்திருந்தார். போராளியாகிய இரண்டே ஆண்டுகளுக்குள் நான் அறிந்ததெல்லாம் ஆரம்பப் பயிற்சியும் பாண்ட் வாத்தியக் கருவிகள் இசைத்தலுமே.
நானும் தளபதியவர்களும் முதன்முதலாகச் சந்திக்கிறோம். “நீ பெரிய ஆள்தான் என்ன. அண்ணை சொல்லி விட்டார். நல்லாச் சாப்பிடட்டாம். கீரை கனக்க சாப்பிடட்டாம். உனக்கு கட்டாயம் கண் தெரியுமாம்.”
அன்றிரவு புதிய நம்பிக்கையோடு பொழுதைக் கடந்தேன்.
காலையில் ஒற்றைக்காலால் கெந்திக்கெந்தி….
“சரி சரி நேர வாங்க நேர வாங்க… கொஞ்சம் வலது பக்கம் ஒரடி திரும்புங்க… ஆஆ இன்னும் சொட்டுத் தூரம்… ஆ இங்கால திரும்புங்க.”
நடக்க முடியாத தோழிகள் கிடக்கும் கட்டிலடிகளுக்குச் சென்று ஒருகையால் சோப்பு, தண்ணி, முகம் கழுவக் கிண்ணம், சீப்பு, கண்ணாடி, பவுடர் எடுத்துக் கொடுத்து உதவுவேன்.
“எல்லாரும் உங்க உங்கட கட்டில்களில இருங்கோ டொக்டர் வாறார்” என்ற தாதியின் அறிவித்தலுக்கு என்னால் வேகமாகச் செல்ல முடியவில்லை. மெதுமெதுவாகக் கெந்தி கட்டிலை அடைய இப்போது தாதியின் குரல் உதவியது.
கட்டிலில் இருந்தவுடன் “கெட்டிக்காறி” என்று தோளில் தட்டிய மருத்துவர் கண்களைப் பரிசோதித்தார். பின்னர்
“வெளிச்சம் தெரியிதா?”
“இல்ல டொக்டர்”
“வடிவா பாருங்க. மேல லைற் வெளிச்சம் தெரியிதா”
……
“வெளிச்சத்தை நோக்கி நாடியை நிமிர்ந்தினார்.
வடிவா பாருங்க”
எனது முகம் மலர்ந்தது
“ஓம் டொக்டர். மெல்லிசா மங்கலா தெரியிது”
“நேஸிட வெள்ளை உடுப்பு தெரியிதா”
“இல்ல டொக்டர்”
“நேஸ் தூரவா நிக்கிறா”
“ஓம் வெள்ளையா ஒரு அசைவு தெரியிது”
“வெரிகுட். காயம் மாறட்டும். ஒப்ரேசன் செய்வம். உங்களுக்கு பார்வை வரும் என்று நம்புறன். முயற்சிப்பம்.”
மருத்துவர் நகர்ந்தார். வேறொரு குரல் என்னருகிலே,
“நீங்கள் லக்கி. ஆசியாக் கண்டத்திலேயே கண் ஒப்ரேசனுக்கு பேர்போனவர் குகதாசன் டொக்டர்தான். அவர்தான் உங்களுக்கு ஒப்ரேசன் செய்வார். நம்பிக்கையோட இருங்கம்மா. உங்களுக்கு கண் தெரியும்”
அந்தக் கண் சிகிச்சைக்காகவே என் இருண்ட நாட்களை வேகமாகக் கடந்தோம். ஆம் தோழியர் ஊட்டிவிட்ட உணவை ஒதுக்காமல் சாப்பிட்டேன். மணியரசி கீரை கீரையாக அள்ளித் தீத்தினாள்.
குளிசைகளால் இறுகிய வயிறு உணவை ஓங்காலிக்கச் செய்யும்.
ஆனாலும் மணியரசி “இன்னும் ஒரு வாய் இன்னும் ஒரேயொரு வாய். கண்ணுக்காக….” என்பாள்.
காயம் விரைந்து மாறியது. கண் வோர்டில் சேர்க்கப்பட்டேன்.
இடதுகண் தெரியவர வாய்ப்பு உள்ளது. வலது கண்ணையும் செய்துபார்ப்போம் என்று சத்திரசிகிச்சை செய்தார்.
வலதுகண் பார்வை வர வாய்ப்பில்லை என்பது உறுதியானது. சில நாட்கள் ஓய்வின்பின் இடதுகண் சிகிச்சை நடைபெற்றது.
மூன்றாவது நாள் காலை கண்கட்டை அவிழ்த்தபோது
வெளிச்சத்தால் கூசிக் கலங்கிய எனது விழியில் தளதளத்த கலங்கிய உருவமாக மருத்துவர் குகதாசன் நின்றார்.
“சில நாட்களில் பார்வை இன்னும் கொஞ்சம் தெளிவாகும். கண்ணாடி போட்டால் தெளிவாகத் தெரியும்” என்றார்.
அவரது தொடர் சிகிச்சை எனது பார்வையை மீட்டுத் தந்தது. என்போன்று எத்தனையோ பேருக்கு விழிகொடுத்த வேந்தன் விழிமூடினார்.
அன்னாரது ஆத்மா சாந்தி பெற எனது பிரார்த்தனைகள்….
(வெற்றிச்செல்வி அக்கா அவர்களின் முகநூல் பதிவிலிருந்து)