பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறித்து வருகிறது.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்கு முறைகளில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பாக, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம்.
தற்போதைய அரசாங்கம், தேர்தல் மேடைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறியது. ஆனால் அந்தச் சட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளை பறிக்கும் வகையில் தற்போது பயன்படுத்தி வருகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறையில் ஈடுபடுவது நியாயமான செயலல்ல. தற்போதைய அரசாங்கம் பெரும் மக்கள் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையின் கூடிய ஆதரவு கிடைத்தது. தற்போது நீக்குவோம் என சொல்லப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றனர். சொன்னதை செய்யும் அரசாங்கமாக இருந்தால் இந்த அடக்குமுறையை நிறுத்த வேண்டும்.
அரசாங்கம் நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சமூக வலைதள ஆர்வலர்களை கைது செய்தாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை அவ்வாறு கைது செய்ய முடியாது என நீதிபதிகள் கூட கூறியுள்ளனர். அவ்வாறே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் யாரையெல்லாம் கைது செய்யலாம் என்பது குறித்தும் இந்த அரசாங்கத்துக்கு அவர்கள் பாடமும் புகட்டியுள்ளனர்
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் 50வீத பங்களிப்பை வழங்கி வருகின்றனர். டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்ட பரேட்டே சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இதை மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு நீடித்து, இந்த தொழில் முயற்சியான்மையாளர் கள் தமது வியாபார நடவடிக்கைகளில் தலைதூக்க மூலதன ரீதியாக பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். குறைந்த வட்டி விகிதத்தில் மூலதனம் வழங்கப்பட வேண்டும். கடனை ஓரளவேனும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நாட்டில் அண்மைக் காலமாக நிலவி வரும் மோசமான காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவசர வேலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி, அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை கூட்டுங்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், புதிய வானிலை தகவல்களை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். உலக வங்கியும், ஜப்பானும் இதற்கான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க தயாராக உள்ளன. எனவே இவற்றை பெற வேண்டும். அத்துடன் பயிர் சேதத்தினால் நாட்டின் உணவு கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
சுகாதாரத் துறையில் கடுமையான சிக்கல் நிலவி வருகிறது. தற்போது புற்றுநோய்க்கு வழங்கப்படும் இன்சுலின், சோடியம் பைகார்பனேட் போன்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இவற்றுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒத்துழைப்பு நாமும் பெற்றுத் தருவோம்.
.25000 ரூபா உர மானியமாக இன்னும் 217,985 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.15000 இரண்டு சுற்றுகளில் முறையே 228,000 மற்றும் 165,000 பேருக்கும் கிடைக்க வேண்டியுள்ளது. கூறிய படியே 25,000 மானியம் முறையாக வழங்கப்படவில்லை. எனவே இதனை முறையாக முன்னெடுக்க வேண்டும்.
அரிசி தட்டுப்பாட்டுக்கு முறையான தீர்வொன்று காண வேண்டும். வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என கூறிய தற்போதைய ஆட்சியாளர்கள் மேடைகள் தோறும் கூறினர். இன்று அவர்களது அரசாங்கமே அரிசியை இறக்குமதி செய்து வருகிறது. பொருட்களின் விலைகள் கூட வேகமாக அதிகரித்து வருகின்றன. குடிமக்களின் உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளை புரிந்துகொண்டு, அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க நிலையான திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்த விடயத்தில் நிலைபேறானதொரு நிலையை பேணி வருவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்க்க மாட்டோம், மக்கள் ஆணை கிடைத்தவுடன் எரிபொருள் சூத்திரத்தை நீக்கி விட்டு, எரிபொருள் விலையைக் குறைப்போம் என்று சொன்னாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. அரசாங்கம் சொன்னதைச் செய்வதாக இருந்தால் இதையும் உரியவாறு செய்ய வேண்டும்.
திங்கட்கிழமை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தாம் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தரப்பினர் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும் போது கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாட்டுக்கு வருவதை விடுத்து அடக்குமுறைக்கு வழிவகுப்பதை நாம் ஒருபோதும் அனுமதியோம் என்றார்.