தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அநுர அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் பின்னர் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கூறியதாக சிறிநேசன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(08.12.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதன் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
அதில் முதலாவதாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தை நியாயமான அடிப்படையில் மிகவும் விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம்.
அத்துடன் இராணுவத்தினராலும், குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிப்பு விடயம் தெரிவிக்கப்பட்டது.
அதில் முக்கியமாக மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைக் காணி தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம்.
நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மேய்ச்சற்தரையில்லாத நிலையில் அவஸ்தைக்குள்ளாகியுள்ளமை பற்றித் தெளிவுபடுத்தியுள்ளோம்.
மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன், அதனூடாகக் கைது செய்யப்பட்டுள்ள அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.
அதுமட்டுமல்லாது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மூலமாக கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எம்மால் சொல்லப்பட்டதுடன், வடக்கு – கிழக்கில் அபிவிருத்தி குன்றிக் காணப்படும் விடயம் பற்றியும் கூறியிருந்தோம். இதன் நிமித்தம் விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயங்களை ஜனாதிபதி நுணுக்கமாகவும், அவதானமாகவும் செவிமடுத்தார். இதில் இனப்பிரச்சினை தீர்வு என்ற விடயத்தில் அவர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
அந்த திருத்தம் வரும்போது எம்மால் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திற் கொள்வதோடு தென்னிலங்கை மக்களும் இந்த விடயத்தில் குழப்பம் அடையாத விதத்தில் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாக இருப்பினும் கடந்த காலங்களில் நாங்கள் தென்னிலங்கைத் தலைவர்களிடம் எமது இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஏமாற்றப்பட்டிருந்தோம்.
எனவே இவரும் ஒரு தென்னிலங்கைத் தலைவர் என்ற அடிப்படையில் இதற்கான செயற்பாடுகள் இடம்பெறும்போது தான் ஒரு நம்பகத்தன்மையை உணர முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.