யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!
வழிப்பறிகொள்ளையில் ஈடுபட்ட இருவர் உட்பட கொள்ளையடித்த நகைகளை வாங்கிய இருவர் என நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.
மானிப்பாய், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வழிப்பறியுடன் தொடர்புடைய வட்டுக்கோட்டை பிரதேசத்தினை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் 20ம் திகதி கோப்பாய் கிருஸ்ணண் கோயில் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரின் 9 பவுண் தாலி கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதில் குறித்த பெண் தனது தாலியினை காப்பாற்ற முற்பட்ட பொழுது, தாலிக்கயிறு கையினை அறுத்ததில் 18 இளைகள் போடப்பட்டு வைத்திய சிகிச்கை பெற்றிருந்தார்.
அதே போல் 17ம் திகதி கோப்பாய் ஜீ.பிஎஸ் வீதியில் வைத்து 1 ½ பவுண் தங்கச்சங்கிலி அறுத்தமை, 28ம் திகதி மானிப்பாய் பிப்பிலி கடைப்பகுதியில் 1 ¼ பவுண் தங்கச்சங்கிலி அறுத்தெடுத்தமை போன்ற சம்பவங்களில் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட நபர்கள் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியிருந்தனர்.
இதனை அடுத்து குறித்த இரண்டு கொள்ளைச் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்;டார்.
அத்துடன் நகைகளை பெற்றுக்கொண்ட கஸ்தூரியார் வீதி பகுதியினை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.