வாகனம் ஒன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு!
மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. Pierrelaye (Val-d’Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டது. அங்கு சுற்றுலாப்பயணி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் மாலை 3.45 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றதாகவும் அறிய முடிகிறது.
மகிழுந்து ஒன்று முற்றாக எரிந்து, அதற்குள் ஆண் ஒருவரது சடலம் இருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
விசாரணைகளில் குறித்த நபர் 60 வயதுகளை உடையவர் எனவும், இச்சம்பவத்துக்கு முன்னதாக பிற்பகல் 1 மணி அளவில் அதே இடத்தில் உயிரிழந்தவருடன் பெண் ஒருவரை அவதானித்ததாக சிலர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.