மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் பொலிசாரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கைதானவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் நபர். எனினும், தமிழர் என்ற போலி அடையாளத்துடனேயே தமது பிரதேசத்தில் இதுவரை தங்கியிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமன்னார் கிராமம் பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தனது மனைவியுடன் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்துள்ளார். கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அவரது மகளும், மருமகனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களது 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு சந்தேகநபர் அடிக்கடி இனிப்பு வகைகளை வழங்குவது வழக்கம்.
நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, 9 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை சந்தேகநபர் கடைக்கு அழைத்து சென்றதை பிரதேசவாசிகள் சிலர் கண்டுள்ளனர்.
இரவு 7.30 அளவில் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, தலைமன்னார் கிராம மக்கள் ஒன்றிணைந்து பெருமெடுப்பில் தேடுதலில் ஈடுபட்டனர்.
தென்னந்தோட்ட காவலாளி சிறுமியை அழைத்து சென்ற தகவல் பரவியதையடுத்து, பிரதேச இளைஞர்கள் தென்னந்தோட்டத்துக்கு சென்று காவலாளியிடம் விசாரணை செய்தனர்.
தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென அவர் தொடர்ந்து கூறியுள்ளார். இதனால் அவரை விட்டு விட்டு சிறுமியை தேடுவதில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
எனினும், காவலாளியின் அசாதாரண நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டு கதவுகளை பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.
இதையடுத்து தென்னந் தோட்டத்துக்குள் புகுந்த கிராம மக்கள் வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளியை பிடித்து வந்து அடி கொடுத்து விசாரணை செய்தனர்.
எனினும், சிறுமியை அழைத்து செல்லவில்லையென காவலாளி தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர்.
அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்பு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேடியதையதை அடுத்து சிறுமியின் சடலத்தை காவலாளி அயல் காணிக்குள் வீசியுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன.
சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது.
கைதான நபர் போலி அடையாளத்துடனேயே அங்கு இதுவரை வசித்துள்ளார். அவர் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அடையாள அட்டை இலக்கத்தை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. அவர் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.