உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்புச் சபையில் தெரிவிப்பு!
குறித்த விசாரணை அதிகாரி அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற நிலையில் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது சாரா ஜாஸ்மின் என்று தெரிவிக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவுக்கு தெரிவித்தது குறித்த அதிகாரிதான்.
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் இருந்து சாரா தப்பிச் சென்றதை தனது உளவாளிகள் நேரில் பார்த்தனர் எனக் கூறி சாட்சியத்தை ஆணைக்குழுவில் முன் வைத்தார். சாரா ஜாஸ்மின் பொலிஸ் பரிசோதகரால் அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் அபூ பக்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்ததும் மேற்குறித்த அதிகாரி தான்.
குறித்த விசாரணை அதிகாரி உருவாக்கிய பொய் சாட்சியம் காரணமாகவே பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் இரண்டு ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருந்துள்ளார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்காக இவ்வாறு செய்துள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.
நேரில் பார்த்ததாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்த உளவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது குறித்த விசாரணை அதிகாரியின் வேண்டுகோளின் பேரிலேயே பொய்ச் சாட்சியம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த விசாரணை அதிகாரி திணைக்களத்திற்கு அறிவிக்காமல் நாட்டைவிட்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளனர்.