சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் நபர் ஒருவர் கைது!
பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்தமை காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுமியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது. பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரின் உடலில் பல பாகங்களிலும் நகக்கீறல்கள் காணப்படுவதாகவும் கைதுசெய்யப்பட்ட நபரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சேறும் சகதியுமான சாரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.