யாழில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!
அதிகளவில் ஹெரோயின் போதைப் பொருட்களை பாவித்த 28 வயதான இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொய்யாத்தோட்டம் பகுதியில் நேற்று நிகழ்ந்துள்ளது.
குறித்த இளைஞன் சில வருடங்களாக ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞனை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்க போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்க பெற்றோர் முயற்சித்த நிலையில் இத் துயரம் நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகளவில் போதைப்பொருள் பாவித்துவிட்டு வீட்டிற்கு வந்து நெஞ்சு வலிப்பதாகக் கூறியவர் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் போதைப்பொருளை பாவித்தமையே உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த நான்காம் திகதி தெல்லிப்பழை கட்டுவனில் ஒரு இளைஞனும் கடந்த வருடங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிகளவில் ஹெரோயின் பாவித்ததால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.