மன்னாரில் யானை தாக்கி படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன் அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா எனும் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ம் திகதி அதிகாலை வீட்டு வளவிற்க்குள் புகுந்த யானை அவரைத் தாக்கியுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் ரோச் லைற் அடித்து பார்த்துள்ளனர். அங்கு நின்ற யானை இருவரையும் தாக்க முயன்றுள்ளது. கணவர் வீட்டிற்குள் ஓடி மறைந்துள்ளார்.
மனைவி வீட்டுக்கு வெளியே மறைய முற்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே இருந்த மனைவியையும் அங்கிருந்த மரங்களையும் தாக்கிவிட்டு யானை அங்கிருந்து சென்றுள்ளது. யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.