அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இனவாத செயற்பாடுகளை தோற்கடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் .அரசியலுக்காக மக்களையும் மாகாணங்களையும், வேறுபடுத்திய காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் உருவாக்கிய அரசாங்கத்தின் பொறுப்பையே ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் முன்வைத்துள்ளார். மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு மூலம் மக்கள் ஊழல் அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.அத்துடன் ஊழல்மிக்க அரசியல்வாதிகளையும் மக்கள் புறக்கணித்துள்ளார்கள்.
அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து புதிய அரசாங்கத்தை மக்களாணையுடன்நாம் அமைத்துள்ளோம். அதிகாரத்தை சிறந்த முறையில் மக்களாட்சிக்கு அமைய செயற்படுத்தும் பொறுப்பு அரசுக்கு ண்டு. மக்களின் எதிர்பார்த்தை சிறந்த முறையில் நாங்கள் நிறைவேற்றுவோம்.
அதேவேளை புதிய அரசியல் மாற்றத்துடன் மக்கள் இனவாதத்தை புறக்கணித்துள்ளார்கள். அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இனவாத செயற்பாடுகளை தோற்கடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் . அரசியலுக்காக மாகாணங்களையும், மக்களையும் வேறப்படுத்திய காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இனி இடமளிக்க போவதில்லை. அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நாங்கள் மலினப்படுத்த போவதில்லை.
நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது நாட்டில் பொலிஸ்மா அதிபர் இருக்கவில்லை. அமைச்சரவையின் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் புறக்கணித்த நாட்டையும், அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆணைக்குழு புறக்கணித்த நாட்டையுமே நாம் பொறுப்பேற்றோம். பொருளாதாரம், சமூகம் , அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம் என்றார்.