யாழில் சிறுவர்களைக் கடத்த முயற்சி:சந்தேக நபர் மடக்கிப்பிடிப்பு!
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்களால் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபரை பொலிஸார் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்துள்ளார்.
பின்னர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்மானியா கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை குறித்த நபர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து, நையப் புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது.
குறித்த அசம்பாவித சம்பவங்கள் காரணமாக, மாணவர்கள் தனித்து செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து செல்லுமாறும் பல பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.