ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து (31.08.2024) அன்று கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
அவர் மேலும் கூறியவை வருமாறு, “எமது மக்களின் அமோக ஆதரவுடன் நானும், எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பாராளுமன்றத்துக்கு தெரிவானோம். அவ்வாறு தெரிவானதன் மூலம் நெருக்கடியான காலகட்டத்தில்கூட எமது மக்களுக்கு சேவையாற்ற முடிந்தது.
எமது பொதுச்செயலாளர் அமைச்சரான பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கும், முழு நாட்டுக்கும் பல சேவைகளை செய்யக்கூடியதாக இருந்தது.கொட்டகலை உட்பட பல பகுதிகளில் வீதிகள் புனரமைக்கப்பட்டன. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்தகாலங்களில் முழுமைப்படுத்தப்படாதிருந்த வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டன. புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பமாகின. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார். இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது .
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆள வேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம் இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.
இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை . நடைமுறைக்கு சாத்தியமான உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.” – என்றார்.