ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இயலும் சிறிலங்கா” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் சென்று படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் “இயலும் சிறிலங்கா” தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது இயலும் சிறிலங்கா என்ற விஞ்ஞாபனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த இலங்கை படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர் மேலும் ஒரு அடியை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமும் நாளை (29) வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தவிசாளர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பான தேர்தல் விஞ்ஞாபனத்தின் அனைத்து திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.