தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்- ரணில் விக்ரமசிங்க!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் அத்துடன் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் கொள்கை உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ”எமது பொருளாதாரம் ஏன் விழுந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காலத்துக்கு காலம் நபருக்கு நபர் ஏற்றது போல் பொருளாதார கொள்கைகளை மாற்றுவது நல்லதா என்பதை பார்க்க வேண்டும். நிலையான பொருளாதாரம் 2026இற்குள் நிறுவப்பட வேண்டும்.
நீண்ட கால திட்டங்கள் என்னால் கையாளப்பட்டு வருகின்றன. நான் மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்காக உழைக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து இந்த நிலையை மாற்ற வேண்டும். அணைத்து நாடுகளுடனும் இணைந்து நாம் வேலை செய்வோம்.
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாந்து போய் இருக்கிறர்கள். இதனால் தான் அவர்கள் ஆட்சி மாற்றத்தை கேட்டார்கள். அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வருவேன்.
அஹிம்சை வழியில் இடம்பெற்று வந்த போராட்டங்கள் மெதுவாக திசை மாறின. அஹிம்சை வழியில் போராடுபவர்களை நான் ஒரு போதும் தொடமாட்டேன். அவ்வாறு போராடுபவர்கள் மீது ஏதேனும் நடந்தால் அவர்கள் உடனே அது தொடர்பாக புகார் கொடுக்கலாம். எரிபொருள் வரிசையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்