மஹிந்தவை கொல்ல முயற்சி பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!
2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை குண்டு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் காவல்துறை அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரால் மேல்நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமனிடம் குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்போது, குற்றபத்திரங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டபுள்ளே கொலை தொடர்பில் லக்ஷ்மன் குரேவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதன்படி, 14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் கம்பஹா மேல்நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
லக்ஷ்மன் குரேவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தவறிய நிலையில் அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.