திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் மகர ராசியில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் தனுசு ராசியில் இருக்கிறார். மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார். கும்பத்தில் சனி… மீனத்தில் ராகு… கன்னியில் கேது… என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் வேறு கிரக மாற்றம் இல்லை.
சந்திரன் இந்த வாரம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே… நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்தாலும் வாரக் கடைசியில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். அதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி மிகச்சிறந்த நன்மைகளை கொடுக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனை கொண்டு வரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். செவ்வாய் 9 ஆம் இடத்தில் அமர்கிறார். அரசாங்கத்திலிருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும். நீண்ட நாள் பகையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வீர்கள். புதன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான பதிலை பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். பெரும் முயற்சி செய்து மங்கள காரியங்களுக்காக நீங்கள் செய்த ஏற்பாடுகள் சிறிய பிரச்சனைகளைத் தாண்டி வெற்றி பெறும். சனி 11 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பண வரவு உங்களை திக்கு முக்காட வைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ராகு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நிதானமான போக்கை கடைபிடியுங்கள். கேது 6 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய நிலை உருவாகும்.
ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே…. சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் சில பிரச்சனைகளை சந்தித்து மன அமைதியை இழப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் வார இறுதியில் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கும். சந்திரனின் இடப்பெயர்ச்சி நன்மை தீமை என கலந்த பலன்களை கொண்டு வரும். புதிய முதலீடுகளை எச்சரிக்கையாக செய்யுங்கள். நம்பிக்கையான நபராக இருந்தாலும் பண விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். செவ்வாய் 8 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மணல் ஜல்லி வியாபாரத்தில் துணிச்சலுடன் ஈடுபடுங்கள். மனைவியுடன் மல்லுக்கட்டாதீர்கள். புதன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் புதிய உயிர் உற்பத்தியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தாய்மாமன் வழியில் சில சொத்துக்கள் கைமாறி நெருக்கடியான கட்டத்தில் உதவியாக இருக்கும். குரு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். இரவு பகலாக உழைப்பீர்கள். குடும்பத்திற்காக பண சேமிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். சுக்ரன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். கலைத்துறையினர் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அலங்கார பொருள் விற்பனை, அழகு நிலையம் நல்ல லாபத்தை கொடுக்கும். சனி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். மருத்துவச் செலவுகள் மன நிம்மதியை கெடுக்கும். ராகு 11ஆம் இடத்தில் இருக்கிறார். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார் தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே… சூரிய பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். உறவினர்களின் தேவையை பூர்த்தி செய்ய கைக்காசை செலவு செய்வீர்கள். வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடன் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக நகையை அடகு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சந்திரனின் இட மாறுதல்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பான பலனை கொடுக்கும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரிகளுக்கு யோகமான காலகட்டம். சிறு வியாபாரிகள் பெரிய லாபத்தை பார்ப்பார்கள். ரத்த உறவுகளால் சில சிக்கல்கள் உண்டாக்கலாம். புதன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். இளம் வயதினர்கள் திருமண பந்தத்தில் ஈடுபடுவார்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குரு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். இளம் வயதினர் மனதை பரிமாறிக் கொள்வார்கள். காதல் வயப்பட்ட பிள்ளைகளால் சிலர் காவல் நிலையத்துக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். சினத்தை கட்டுக்குள் வைக்காவிட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ராகு 10 ஆம் வீட்டில் இருக்கிறார். பழைய பாக்கிகளை அக்கறையோடு வசூல் செய்வீர்கள். கேது 4 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்பு மன அமைதியை கொடுக்கும்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே… சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அரசாங்கம் வகையில் ஏற்பட்ட சிக்கலை அரசியல்வாதிகள் மூலமாக தீர்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சந்திரனின் சஞ்சாரம் சாதகமான பலனை உங்களுக்கு தருகின்றன. பங்குச்சந்தை வியாபாரத்தில் பயம் இல்லாமல் இறங்கலாம். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மணல் வியாபாரிகள் மன நிறைவான வருமானத்தை பெறுவார்கள். பொதுப்பணித்துறை வேலைகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை கொண்டு வரும். புதன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரம் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை நன்கு ஆராய்ந்து செயல்படுத்துவது நல்லது. குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். சாமர்த்தியமாக பேசி நடக்காத திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். சுக்கிரன் 6 ஆம் இடத்தில் பயணிக்கிறார். குடும்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும் தானாகவே சரியாகிவிடும். ஏறுக்கு மாறாக நடந்த பெண் பிள்ளை நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார். சனி 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில்துறையில் வேகமான முன்னேற்றம் காணப்படும். தடங்கல் இல்லாமல் தன வரவு இருக்கும். கேது 3 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தோடு உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.