கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு பகுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது.
கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் விபத்தினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் விபத்து இடம்பெற்றுள்ளது போன்ற தடயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
கிளிநொச்சி பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்துவந்த நவநீதன் எனும் 48 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகத்தில் வவுனியாவில் ‘ஹயஸ்’ வாகன சாரதி வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது:-
வவுனியாவில் உள்ள ‘கராச்’ ஒன்றில் விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் திருத்துவதற்காக விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாகன சாரதியை கைதுசெய்ததுடன் குறித்த’ஹயஸ்’ வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சாரதியையும் வாகனத்தையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.