ஊடகர் நிமலராஜன் கொலை! 22 ஆண்டுகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் 22 வருடங்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தனது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான 48 வயதான இலங்கையர் ஒருவர் பிரிட்டன் பெருநகர பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். “இந்த நடவடிக்கைகள் குறித்து நிமலராஜன் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களைப் பெற அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து வசிக்கும் இலங்கை சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்” என்று பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் போர்க்குற்றங்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு கட்டளை பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்தப் பிரிவினரால் இங்கிலாந்தின் அதிகார வரம்புக்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்காவது போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டுவருவதற்கு உதவும். போர்க் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான இடமாக இங்கிலாந்து இருக்காது என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பிரிவு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.